Tuesday, 19 March 2013

திருஅருட்பாவும் வள்ளலார் மறைவும்


          திருஅருட்பாவும் வள்ளலார் மறைவும்                                                       
                                          சிகரம்.ச.செந்தில்நாதன்

     தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பைச் செய்து வரலாற்றில் போற்றிப் பேசப்படும் பலபேர், அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய செல்வாக்குடன் மக்கள் மத்தியில் திகழ்ந்தார்கள் என்று அறிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கணிசமான அளவு இல்லை.  கிடைப்பதெல்லாம் புராணங்களும், புனைக்கதைகளும் தான்.  வான் புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள், கட்டுத்தறியும் கவிபாடும் வீட்டிற்கு உரிய கம்பன் முதலியவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்குத் தாங்கள் வாழ்ந்த காலத்தில் செல்வாக்கோடு இருந்தார்கள் என்பதற்கு எந்தத் தகவலும் இல்லை.  வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் போது, வாழ்ந்த காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தவர்களாகக் கண்ணில்படுபவர்கள் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தான்.  சுந்தரர், மாணிக்கவாசகர் செல்வாக்கு கூட சம்பந்தர், அப்பர் செல்வாக்குக் இணையானதாகக் கொள்ள முடியாது.  ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அருணகிரிநாதர் தான் வாழ்ந்த காலத்தில் மக்கள் மத்தியில் மிருந்த செல்வாக்குடன் இருந்தவர்.  அவருக்கு அடுத்தபடி வள்ளலார் வருகிறார்.  மடாதிபதிகள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டாலும், மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு வள்ளலாருக்கு உதவி இருக்கிறதா என்றால், உதவி இருக்கிறது.  அதுபோலவே வள்ளலாரின் திரு அருட்பா கற்றவர் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்தது.  அது வள்ளலார் மறைந்த போது பெரிதும் உதவி இருக்கிறது.

     வள்ளலாரின் மறைவை மரணம் என்று பக்தர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.  அவர் ஜோதியில் கலந்துவிட்டார் என்று நம்பினார்கள்.  சிலர் மத்தியில் இந்தக் கருத்து நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தது.  திரு அருட்பா கற்றவர்கள் திரு அருட்பாவை மூலதனமாகக் கொண்டு, அதாவது அதை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஜோதியில் கலந்து விட்டார் என்ற கூற்றை நியாயப்படுத்துகிறார்கள்.  வள்ளலார் தான் ஒரு தனிமனிதர் என்ற நிலைமாறி இறைவனோடு ஒன்றிய உணர்வைப் பெற்றுவிட்டார் என்று நம்புகிறார்கள்.  தெய்வத்துள் வாழும் தெய்வமாக மாறிவிட்டார் என்கிறார்கள்.  மரணமில்லா பெருவாழ்வை இறைவனிடம் வேண்டிப் பெற்றுவிட்டார் என்கிறார்கள்.  வள்ளலார் தன்னை நாயகியாகவும், இறைவனை நாயகனாகவும் பாவித்து இறைவனை ஆன்மீகத் திருமணம் செய்து கொண்டார் என்று பெருமை பேசுகிறார்கள்.  தனக்கு நேரப் போகும் மறைவை வள்ளலார் உணர்ந்திருந்ததாகவும், தான் சித்தியடையப் போவது குறித்து, சன்மார்க்க சங்கத்தார்க்கு இறுதிக் கட்டளை இட்டதையும் அன்பர்கள் சுட்டிக் காட்டுடகிறார்கள்.  அதைப் பார்ப்போம்.

      “சன்மார்க்க சங்கத்தாருக்கு இட்ட இறுதிக் கட்டளை 31.8.1874 ஸ்ரீமுக வருடம் தை 19.  நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப் போகிறேன்.  பார்த்து அவநம்பிக்கையடையாதீர்கள்.  ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறுவீடாகத்தான் இருக்கும் படி ஆண்டவர் செய்விப்பார்.  என்னை காட்டிக் கொடார்.”
    
     வள்ளலாரின் இந்தக் கடிதத்தை யாரும் சந்தேகிக்கவில்லை.  ஆங்கிலேயரான தென்னாற்காடு மாவட்ட ஆட்சியரும் சந்தேகிக்கவில்லை.  வள்ளலாரின் கடிதம் பற்றி யாரும் விவாதிக்விட்டாலும், மறைவு பற்றிப் புகைச்சல் இருந்திருக்கிறது.  அது தென்னாற்காடு மாவட்ட ஆட்சியரான ஆங்கிலேயர் J.H.GARSTIN என்பவரின் பார்வைக்குச் சென்றது.  மாவட்ட ஆட்சியர் வள்ளலாரைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க வேண்டும்.  அதனால் தான் அவர் மறைவு குறித்த மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தபோது, தன் கீழ் இருக்கும் அதிகாரிகளை அனுப்பி விசாரிக்காமல் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த அந்த நாட்களில், அவரே விசாரிக்க நேரில் வந்தார்.  வள்ளலார் சித்திவளாக அறைக்குள் நுழைந்து உள்ளே தாளிட்டுக் கொண்ட அறையை, ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் நினைத்திருந்தால் திறந்திருக்க முடியும்.  அந்த அதிகாரம் அவருக்கு இருந்தது. வள்ளலார் மறைவு பற்றி புகார் இருந்தது.  ஆனால் மாவட்ட ஆட்சியர் சித்திவளாக அறையைத் திறக்கச் சொல்லவில்லை.  அது ஏன்?  திறக்கச் சொல்லியிருந்தால் புதிர் வெளிப்பட்டிருக்கும் அல்லவா?  அறையைத் திறக்கச் சொல்லவில்லை என்பது மட்டும் அல்ல, இருபது ரூபாய் பணம் கொடுத்து ஏழைகளுக்கு உணவு அளிக்கச் சொல்லி இருக்கிறார்.  அதன் பின்னர் தென்னாற்காடு மாவட்ட 1878ம் ஆண்டு மாவட்ட இதழ் தொகுப்பில் அவர் மறைவு பற்றி குறிப்பு வெளியானது.  இக்குறிப்பு மீண்டும் 1906ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட அரசிதழிலும் வெளியானது.  அதைப் பார்க்கலாம்.

    “ …….In 1874, he locked himself in a room (still in existence in Mettukuppam, hamlet of karunguli) which he used for Samadhi or mystic meditation, and instructed his disciples not to open it for some time.  He has never been seen since and the room is still locked.  It is held by those who still believe in him that he was miraculously made one with his God and that in the fullness of time he will reappear to the faithful.
     The report concludes with these words:
      Whatever may be thought of his claims to be religious leader, it is generally admitted, by those who are judges of such matters, that his poems, many of which have been published stand on a his plane, and his story is worth noting as an indication of the directions which religious fervor may still take.”

     பொதுவாக ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களின் மத, சமய, சடங்குகள் நம்பிக்கைகள் சார்ந்தவற்றில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.  இவைகளில் தலையிட்டால் உணர்வுகள் தூண்டப்பட்டு கொந்தளிப்பு ஏற்படும் என்று கருதி தலையீட்டைத் தவிர்த்தார்கள் ஆங்கிலேயர்கள், சிப்பாய் கலகம் என்றும், முதல் சுதந்திரப் போராட்டம் என்றும்  அழைக்கப்பட்ட நிகழ்வுகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சி சில படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருந்தது.  ஆனால் நாம மேலே பார்த்த மாவட்ட ஆட்சியரின் குறிப்பு மறைமுகமாகக் கூட தலையிடாக் கொள்கையைப் பிரதிபலிக்கவில்லை.  மாவட்ட ஆட்சியர் முதலில் மறைவின் நிகழ்வைப் பதிவு செய்கிறார்.  அதன் பின்னர் வள்ளலார் தன்னை ஒரு சமயத் தலைவர் என்று அழைத்துக் கொள்வது பற்றி எத்தகைய கருத்து இருந்தாலும் அவருடைய கவிதைகள் மிகவும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு மதிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் உணர்ந்தார்.  அதாவது மிகுந்த பக்தர்களை உடைய வள்ளலார் சமயவாதி என்பதில் விதாதத்திற்கு உட்பட்ட போதும், திரு அருட்பா அருளியவர் என்ற நிலையில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை மதிப்பிட்ட ஆட்சியர் வள்ளலார்  திருக்காப்பிட்டுக் கொண்ட அறையை அதிகாரம் கொண்டு திறந்து பிரச்சனையில் பிரவேசிக்க விரும்பவில்லை.  அந்த அறை திறக்கப்படாமல் இருக்க திரு அருட்பா ஆங்கிலேய மாவட்ட ஆட்சியரின் மனத்தை ஆட்சி செய்திருக்கிறது என்பது தெளிவு.  திரு அருட்பா வெறும் தோத்திரப் பாடல் அல்ல.  அறிவின் வெளிச்சம்.  வரப்போகும் சமுதாயத்தின் விடிவெள்ளி.  திருஅருட்பா மீது பொது மக்களும் அரசு உயர் அதிகாரிகளும், சமூகத்தின் மேல் நிலையில் இருந்த பெருமக்களும் வைத்திருந்த பற்றும், மதிப்பும் மாவட்ட ஆட்சியரை அதிகாரத்தைப் பயன்படுத்தாமலிருக்க தடுத்தன.  மாவட்ட ஆட்சியரின் செயல் உண்மையிலேயே திகைக்க வைக்கிறது.  கேள்வி கேட்கவே யாரும் இல்லாத காலகட்டத்தில் மாவட்டத்தையே ஆண்டு கொண்டிருந்தவர், கதவைத் திறக்காமல் போனதற்கு, உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பது மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது.  பாமரத்தனமாக நம்பிக்கைகளுக்கு அவர் கனம் கொடுத்திருக்க மாட்டார்.  சமூகத்தில் வள்ளலாருக்கு இருந்த மதிப்பை அவர் திருஅருட்பாவின் பெருமை கொண்டு அளந்தார்.  திருருட்பா சொல்லும் சேதியின் அருமை அவரை பாதித்திருக்க வேண்டும்.  வள்ளலாரை, திருஅருட்பா தந்தவரை மதிக்கும் முகமாகத்தான் மாவட்ட ஆட்சியர் வள்ளலார் தாளிட்டுக் கொண்ட அறையைத் திறக்கச் சொல்லவில்லை என்பது திண்ணம்.

     வள்ளலாரின் தத்துவம் மாவட்ட ஆட்சியருக்குப் புரியாதிருந்தால் இருபது ரூபாய் பணம் கொடுத்து உணவளிக்கச் சொல்லியிருக்க மாட்டார்.  திருஅருட்பா ஒரு புதிய அருட்பா.  இது வெள்ளைக்காரனுக்குப் புரிந்தது.  பின்னர் வந்த பாரதிக்கும் புரிந்தது. 

     “இந்துஸ்தானத்திற்குள் தமிழ்நாடு முதலாவதாகக் கண்விழித்தது.  இராமலிங்க சுவாமிகள் போன்ற மகான்கள் தமிழ்நாட்டின் புதிய விழிப்பிற்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கியுள்ளார்கள்.”  (பாரதியார் கட்டுரைகள்)

Monday, 25 February 2013

தோலுக்கு விருது பெற்ற தோழர்


               தோலுக்கு விருது பெற்ற தோழர்

     சாகித்திய அகாதமி 1955-லிருந்து விருதுகள் தருகின்றன.  முதல் விருது சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளைக்குக் கிடைத்தது என்றாலும் விருது பெற்றவர்கள் பட்டியலைப் பார்க்கும் போது நாவலாசிரியர்களே அதிக விருதுகளை அள்ளிச்சென்றிருப்பதைக் காணமுடியும்.  நாவலாசிரியர்களிலும் உணர்வுப் பூர்வமான முற்போக்கு எழுத்தாளர்களை நோக்கி விருதுகள் பயணிக்கத் தொடங்கியது மிகவும் பின்னால் தான்.  வணிக ஏடுகளில் வாழ்க்கையை, சமுதாயத்தை, மக்களின் போராட்டங்களை முன்னிறுத்தாத பல தொடர்கதைகளும் விருதுகளை வாங்கி இருக்கின்றன.  அந்தப் போக்கு பிற்பட்ட காலத்தில் முறியடிக்கப்பட்டது. இந்த ஆண்டு டி.செல்வராஜின் ‘தோலுக்கு‘ விருது கிடைத்திருக்கிறது.  பொதுவாக, முற்போக்குப் படைப்புகள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு தற்போது விருதுகள் பெறுகின்றன.  இது எப்படிச் சாத்தியமாயிற்று என்று செல்வராஜைக் கேட்டபோது, ’இலக்கிய உலகில் நாம் நடத்திய நெடிய போராட்டத்தால் சாத்தியமாயிற்று’ என்றார்.  விருதுகள் வீடு தேடி வர வேண்டுமானால், இலக்கிய உலகில் நாடு தழுவி போராட வேண்டியிருக்கிறது என்றார்.  மேலும் விருதை தனிப்பட்ட முறையில் தனக்குக் கிடைத்ததாக அவர் பார்க்கவில்லை.  தான் சார்ந்த இயக்கத்திற்குக் கிடைத்த விருதாகவே பார்த்தார்.  அது அவர் அடக்கத்தைக் காட்டுகிறது.  அதே சமயம் புறந்தள்ள முடியாத போராளிப் படைப்பாளியாக அவர் நின்று காட்டியதை அங்கீகரிக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது என்பதையும் சொல்லாமல் சொல்கிறது அல்லவா?

     நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே செல்வராஜின் ’மலரும் சருகும்’ என்ற நாவல் தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்துவிட்டது.  அடுத்து சில ஆண்டுகளில் வெளிவந்தத் ’தேனீர்’ சிறந்த நாவல் என்ற பெயரைக் கொள்முதல் செய்துவிட்டது.  இந்த இரண்டு நாவல்களிலுமே அவர் உயரத்திற்குப் போய்விட்டார்.  செல்வராஜின் உயரத்தைத் தொட விருதுகள் தான் ஆமை வேகத்தில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தன. விருது கிடைத்தது தாமதமாகத்தான்.  இருந்தாலும் ஒரு ஆறுதல்.  பாரதிதாசன், கண்ணதாசன் போல் கருமாதிக்குப் பிறகு தரப்படவில்லை அல்லவா?

     நாவலாசிரியராக அறியப்பட்டாலும், முதலில் சிறுகதைதான் எழுதினேன் என்கிறார் செல்வராஜ்.  ஆனால் என்ன கொடுமை.  அந்தச் சிறுகதைகள் அவர் கைவசம் இல்லையாம்.  இது அவருக்கு மட்டுமா இழப்பு?  விருது கிடைத்ததும் செல்வராஜை ஓடிப்பிடிப்பதும், வர்ணனை செய்வதும் ஊடகங்களின் வாடிக்கையாகிவிட்டது.  இது ஆரோக்கியமான போக்கு அல்ல.  அவரை முன்பே அடையாளம் கண்டிருக்க வேண்டும்.

     நசுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்றால்,  அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து சங்கம் கண்டார்கள் என்பதைச் சொல்ல வேண்டும் அந்தச் சங்கத்திற்கு வழிகாட்டும் தத்துவம் பற்றிப் பேச வேண்டும்.  அந்தத் தத்துவம் தமிழ்நாட்டில் வளர்ந்து கட்டமைத்துக் கொண்ட வரலாற்றைச் சொல்ல வேண்டும்.  இதை ’தோல்’ சரியாகச் சொல்கிறது.  இதற்குக் களமாக நவீன தொழிற்சாலைகளைக் கொள்ள முடியாது.  அதனால்தான் நாவல் பின்நோக்கிச் சென்று 1930கள் முதல் 1950களின் கடைசி வரை படர்ந்து செல்கிறது.                 வர்க்கப் போராட்டத்தோடு சாதி ஒழிப்பை இணைக்கவேண்டும் என்பது இன்றைய குரல் என்றாலும், அன்றே நடைமுறையில் இருந்தது என்பதை செல்வராஜ் என்னும் படைப்பாளி உணர்ந்திருந்தார்.  அதற்கு ஆதாரம் தான் தோல்.  எனவே இது முற்போக்கு இலக்கியத்திலும் ஒரு திருப்புமுனை.  ’தோல்’ நாவலுக்கு செல்வராஜ் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்.  அது பற்றிக் கேட்ட போது, ’தோல் நாவல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என்னுடைய முன்னுரை’ என்றார்.  உண்மைதான், நாவலின் கதை மாந்தர்கள் வீரர்கள் அல்லர்,   வஞ்சிக்கப்பட்டவர்களே என்று ரோமண்ட் வில்லியம்சை மேற்கோள் காட்டி முன்னுரையில் பேசுகிறார்.  அதாவது கல்கிகால வரலாற்றுப் புதினங்களைத் தாண்டி நேர் மாறான இலக்கியச் சாலையில் நாவல்கள் முன்னேறிச் செல்கின்றன என்கிறார் அவர்.  அது மட்டுமல்ல, தீண்டாமை எதிர்ப்பு வெறும் சமூகச் சீர்திருத்தமாகப் பார்க்கப்பட்டது போய், அது பழங்கதையாய் மரித்துப் போய் வர்க்கப் போராட்டமாய், சமூக விடுதலையாய் பரிணாமம் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.  தோல் ஒரு வர்க்கப் போராட்ட நாவலாகவும், தலித் நாவலாகவும்,  கம்யூனிச இயக்கத்தின் ஒரு முப்பது ஆண்டுகால வரலாற்றைப் பதிவு செய்யும் நாவலாகவும் அடைந்திருக்கிறது.  எனவே நாவலின் பரப்பளவு அதிகமாகத்தானே இருக்க வேண்டும்?  அதற்கு ஏற்ப பாத்திரங்கள் இடம் பெற வேண்டாமா?

     ’தோல்’  நாவலில் 117 பாத்திரங்கள் உட்புகுந்து நாவலை இயக்குகின்றன.  இவ்வளவு பாத்திரங்கள் உள்ள நாவல் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  எண்ணற்ற பாத்திரங்கள் இருப்பது ஒரு காவியப் பண்பு.  அந்த பண்பு இந்த நாவலில் இருக்கிறது.  காவியம் அரண்மனைகளையும், அந்தப்புரங்களையும் பேசும்,  ஆனால் ’தோல்’ தோழர்களின் போர்க்குணத்தையும், தியாகத்தையும் பேசுகிறது.  பல பாத்திரங்கள் உண்மைப் பாத்திரங்கள்,  நேற்று வாழ்ந்த மனிதர்கள்.

     பொதுவுடைமைக்கட்சி வெள்ளைக்காரன் ஆட்சியில் மட்டும் அல்ல, சுதந்திர இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது.  1952 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பெற்ற வெற்றிக்குப் பிறகு தடை விலக்கப்பட்டது.  உழைக்கும் மக்களின் விடுதலைக்காகத் தங்களை அர்பணித்துக் கொண்ட தலைவர்கள், தங்கள் திருமண வாழ்க்கையை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.  தடை விலக்கப்பட்ட பிறகு திருமண வாழ்க்கையையும் மேற்கொண்டார்கள், எல்லாம் சாதி மறுப்புத் திருமணங்கள், புரோகிதம் விலக்கிய திருமணங்கள், செல்வராஜ் தன் நாவலைத் திருமணத்தோடும், போராட்டத்தோடும் முடிக்கிறார்.

     ’யார் என்ன கோணத்தில் பார்த்தாலும் என் படைப்பின் நோக்கம் தெளிவானது’  என்கிறார் செல்வராஜ்.
     அவர் படைப்பின் நோக்கம் என்ன?
     சோக்ஷலிச எதார்த்தம்
     அவரின் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா? 
     நிறைவேறி இருக்கிறது.

     இது படிப்பவர்களுக்குத் தெரிகிறது.  ஆனால் படிக்காத (அதாவது நாவலைப் படிக்காத)  ஜெயமோகனுக்குத் தெரியவில்லை.  பொறாமையில் பாவம் புலம்புகிறார்.  விருது கிடைத்தால் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டியதுதானே என்று ஆலோசனை சொல்கிறார்.  இவருக்கு விருது கிடைத்தால் ஓய்வு எடுத்துக்கொள்வாரா?  இலக்கிய உலகிற்கு உறுதிமொழி அளிப்பாரா?  ஒரு நல்ல இலக்கியவாதி இப்படி எல்லாம் பேசக்கூடாது.

     சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து ஓய்வு எடுக்க செல்வராஜ் விருது வாங்கவில்லை.  அடிமை விலங்கை உடைத்து நொறுக்குவதற்க விருதை ஒரு சுத்தியலாக அவர் பயன்படுத்துவார்.  சாகித்திய அகாதமி தன்னை அறியாமலே ஒரு ஆயுதத்தை டி.செல்வராஜீக்கு வழங்கி இருக்கிறது.

Thursday, 17 January 2013

நான் கண்ட சென்னை

                                               நான் கண்ட சென்னை

18.01.2013                                   சிகரம்.ச.செந்தில்நாதன்

     சென்னை நகரம் தோன்றி 360 ஆண்டுகள் ஆனதை முன்னிறுத்தி, சென்னை நகரின் தோற்றம், வளர்ச்சி, அதில் ஏற்பட்டுள்ள சகலவிதமான அக, புற மாற்றங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகி இருக்கின்றன.  என்றாலும் சென்னை பற்றி சொல்ல மறந்த கதைகளும், பார்க்க மறுத்த காட்சிகளும் உண்டு.  அவற்றைச் சொல்லும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

     நான் சென்னைக்கு 1959 ஆம் ஆண்டு வந்தேன்.  திருவாரூரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த நான் மேல் படிப்பிற்காக சென்னையை அடைந்தேன்.  அந்த ஆண்டுகள் கல்லூரிப் படிப்பில் சில மாற்றங்கள் நேர்ந்த ஆண்டுகளாகும்.  கல்லூரிகளில் முன்பெல்லாம் முதலில் இன்டர் மீடியட் என்ற வகுப்பில் படிக்க வேண்டும்.  அது இரண்டு ஆண்டாகும்.  அதை முடித்த பின்னர் தான் பி.ஏ,, பி.எஸ்.சி. போன்ற பட்டப் படிப்பிற்குப் போக வேண்டும்.  அந்தப் பட்டப் படிப்பும் இரண்டு ஆண்டுகள் தான்.  இன்டர் மீடியட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.  கல்லூரிகளில் இருந்த இன்டர் மீடியட் வகுப்பு எடுக்கப்பட்டது.  அதற்குப் பதில் பி.யு.சி. எனப்படும் புகுமுக வகுப்பு நுழைக்கப்பட்டது.  அதுமட்டும் அல்ல, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நுழைவு வகுப்புகள் கல்லூரிகளிலேயே வைக்கப்பட்டன.
     ஏன் இந்த மாற்றம்?
கல்வியாளர்கள் இந்த மாற்றத்தைச் செய்ய சில காரணங்களைச் சொன்னார்கள்!
     அப்போதெல்லாம் கிட்டதட்ட பள்ளிகளில் எல்லாம் தமிழ் வழிக் கல்விதான் உண்டு.  பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள், நேராக இன்டர் மீடியட் சேரும் போது, அதாவது ஆங்கில வழி பயிற்சி மொழிக்கு மாறும் போது சிரமப்படுகிறார்கள் என்றும், அதனால் இன்டர் மீடியட் என்னும் இரண்டாண்டு படிப்பிற்குப் பதில் பட்டப் படிப்பை மூன்றாண்டாக்கி,  ஓராண்டு புகுமுக வகுப்பைக் கொண்டுவந்து, இன்டர் மீடியட் படித்து பாதியில் கல்லூரிப் படிப்பை விடுவதைவிட, ஓராண்டு படித்து ஓடிவிடட்டும் என்று நினைத்தார்கள்.  ஆங்கில வழிக் கல்விக்கும், கல்லூரி வாழ்க்கைக்கும் மாணவன் பக்குவப்பட வேண்டும் என்றும் நினைத்தார்கள்.  இந்தத் திட்டம் நல்ல திட்டம் அல்ல.  அதனால்தான் பின்னர் புகுமுக வகுப்பு ஒழிக்கப்பட்டது.  அதற்குப் பதில் பள்ளி இறுதி வகுப்பிற்குப்பின்  +2 கொண்டுவந்தார்கள்.  இன்டர் மீடியட் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.  அந்த இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வந்த மாணவர்களுக்கு ஆங்கில வழியில் பயிற்சி பெறவும் கல்லூரிக் கலாச்சாரத்தோடும், வாழ்வோடும் இணைவதற்கும் தேவைப்பட்டது.

     நான் புகுமுக வகுப்பில் சேர்ந்தேன்.  சென்னை வாழ்க்கை எனக்குப் புதியது.  சென்னைத் தமிழ் மேலும் புதியது.

     சென்னை நனரில் கணிசமான அளவு தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருந்தார்கள்.  அவர்கள் வெளியில் தமிழ் பேசினாலும் வீட்டில் தெலுங்கு பேசுவார்கள்.  என்றாலும் தெலுங்கின் செல்வாக்கு நடை முறையில் இருந்தது.  ஆற்காட்டு நவாபுகள் கட்டுப்பாட்டிலும், பின்னர் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலும் நகரம் இருத்ததும் மொழியில் தெரிந்தது.  பிற மாவட்டங்களிலிருந்து, குறிப்பாக ஆந்திரா பிரிந்த பிறகு, சென்னைக்குக் குடியேறியவர்களால் சென்னை மொழி மாற்றம் கண்டது என்று சொல்லலாம்.  தமிழ் நாட்டிலிருந்து ஆந்திரா பிரிந்த போது, சென்னை எங்களுக்கு வேண்டும் என்று சென்னை வாழ் தெலுங்கு மக்கள் கோரிக்கை வைத்ததிலிருந்து சென்னையில் அவர்களின் "இருப்பை" மதிப்பிட்டுக் கொள்ளலாம்.  "மதராஸ் மனதே" என்று ஊர்வலம் எல்லாம் நடந்தது உண்டு.  நான் ஆந்திரா பிரிந்த பிறகு சென்னைக்கு வந்தவன்.  அன்றைய சென்னைத் தமிழை அனுபவித்தவன்,
                                                  …வளரும்…
     

Saturday, 22 December 2012

            மறுவாசிப்பை முன்மொழியும் நூல்
                        
                                                   …ஜனநேசன்…

    படைப்பாளி படைப்பை முன்வைப்பான், திறனாய்வாளன் படைப்பின் உள்ளடக்கம், அதன் நோக்கம், படைப்பு சமூகத்தில் உருவாக்கும் தாக்கம் போன்றவற்றை எடுத்துரைப்பவன்.  அவனது எடுத்துரைப்பு பல நல்ல படைப்புகளை அடையாளம் காட்டும்.  ஆக சமைப்பவனைப்போல் சுவைப்பவனும், கலைஞனைப் போலவே சுவைஞனும் முக்கியமானவர்கள், தவிர்க்க முடியாதவர்கள், படைப்பு முயற்சி முடிந்த பின்னும், சமூகச் செலவாணிக்கு திறனாய்வாளனின் பங்கு முக்கியமானது, அவசியமானதும் கூட.
     இந்தப் புரிதலில்தான் ’சிகரம்’ செந்தில்நாதனின் திறனாய்வுகள் என்னும் நூலினை எதிர்கொள்கிறோம்.  இந்நூலில் 5 திறனாய்வுக் கட்டுரைகளும், 26 மதிப்புரைகள், அணிந்துரைகளும் என இருபகுதியாக கட்டுரைகள் இடம் பெற்று உள்ளன.
      முதல் பகுதியில் முதல் கட்டுரை ’விந்தன் நாவல்கள் எனும் கட்டுரை’ விந்தன் எழுதிய நாவல்கள் குறித்து ஒரு மறுவாசிப்பை முன்மொழிகிறது.  இக்கட்டுரையில் சிகரம் செந்தில்நாதன் ஒரு முக்கியமான கேள்வியை முன் வைக்கிறார் – ‘அமைப்பு சாராத படைப்பாளியாக இருப்பது பலமா? பலவீனமா?’   அமைப்பு சாராத படைப்பாளி ஒரு சமூகப் பிரச்சனைக்காக தீர்வை எப்படி யதார்த்தமாக முன் வைக்கிறார் என்பதனை விந்தன் எழுதிய ‘பாலும் பாவையும்’ என்ற நாவலை முன் வைத்து விளக்குகிறார்.  விந்தன், புதுமைப்பித்தன் முதலான அமைப்பு சாரா படைப்பாளிகளின் படைப்புகளில் காணப்படும் முற்போக்குத் தன்மையைவிட நம்பிக்கை வறட்சியும் இருண்மை நோக்கும் (PESSIMISM) தூக்கலாக பதிந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.  இந்தக் கட்டுரையை சுத்தம் சுயபிரகாரம் இலக்கியவாதிகள் வாசிக்க வேண்டும்.
     இரண்டாவது கட்டுரையில் கல்கியின் இரு நாவல்களான
’சிவகாமியின் சபதத்தையும், அலைஓசையையும் மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார்’. 
     மகேந்திர பல்லவன் மாறுவேடத்தில் நிகழ்த்தும் பல ஜாலங்கள் அன்று திகைக்க வைத்தன.  மறுவாசிப்பில் இன்று அப்படி இல்லை.  மகேந்திரவர்மனின் பல அதிரடிகளும் ஓரிரு வேலையும் மாறுவேடங்களும் இன்று நம்பும்படியாக இல்லை.  ஒரு சினிமாத்தனம் சிறகடிக்கிறது.  பல்லவ நாட்டுச் சக்கரவர்த்தி வாதாபி புலிகேசியின் நம்பிக்கைக்குரிய ஒற்றுப்போல் சித்தரிக்கப்படுவதும், அவர் திடீர் திடீர் என்று எல்லா இடங்களில் தோன்றுவதும் ஜீரணிக்கமுடியாதவை.  நாகநந்தியின் மாறுவேடமும் அப்படித்தான்.  நாகநந்தி புலிகேசியாய் உருவெடுப்பதும் அந்தக்காலத்தில் சுரங்கப்பாதைகள் இருந்தன என்பதற்காக அதீத கற்பனையில் வாசகனைத் தள்ளுவது என்பதெல்லாம் ஒரு நல்ல இலக்கியப் படைப்பிற்கு உள்ளே வரவேண்டிய அம்சமல்ல.  ’நாவலின் முடிவிலே சிவகாமி கோயிலிலே தாலி கட்டிக் கொள்கிறாள்.  பிற்காலச் சோழர் காலத்தில் வரப்போகும் தேவதாசி முறைக்கு, பொட்டுக்கட்டும் முறைக்கு, இது முன்னோட்டமா?  கல்கி அறிந்தோ அறியாமலோ நாட்டியக்காரிகளின் சமூக நிலையைக் கண்முன் நிறுத்துகிறார்’.
     நாவலுக்கு ஒரு வரலாற்றுத் தோற்றத்தை தருவதற்கு சிறுத்தொண்டர், திருநாவுக்கரசர், குலச்சிறையார், மங்கயர்க்கரசி, பாண்டியன், சோழன், பல்லவர்கள் போன்ற உண்மை மாந்தர்களை இணைத்துள்ள கல்கி, சைவ, சமண, புத்த சமயப் போராட்டங்களையும் பின்களமாக அமைக்கிறார்.  ஆனால் சமயப் போராட்டங்களைச் சித்தரிப்பதில் சார்புநிலை தெரிகிறது.
      இதே போல் ’அலை ஓசை’ நாவல் சுதந்திரப்போராட்ட நாவல் என்று சொல்லப்பட்டாலும், இந்நாவலுக்கு சுதந்திரப்போராட்டம் பின்னணிதானே தவிர சுதந்திரப்போராட்ட நாவலல்ல.  காரணம், சுதந்திரப்போராட்டமும் சம்பவங்களின் எதார்த்தமும் அழுத்தமாகப் பதியாமல் இருக்கிறது.  கதையின் பெரும்பகுதி வடநாட்டில் நடக்கிறது.  அவர்கள் வடநாட்டு வாழ்க்கையோடு ஒன்றவில்லை.  வாசகன் மனத்தில் வடநாட்டு வாழ்க்கை பதியவில்லை.  இப்படி ஒன்றுமே இல்லாமல் ஆயிரம் பக்கம் நாவல் வந்திருக்கிறது.  கல்கி ஒரு நல்ல கதை சொல்லி என்பதைக் காட்டுகிறது. 
     நாவலின் முக்கிய பாத்திரம் சூரியா மகாகவி பாரதி பற்றி ”பாரதியார் என்ன சொல்லி இருந்தால் இப்போது என்ன?  (காதல் பற்றிதான்) …………………………………………………..   அவர் சொன்னதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை.  பாரதியாருக்கு அறிவு தெளிந்திருந்தபோது தேசத்தின் சுதந்திரத்தைப் பற்றி பாடினார்.  கொஞ்சம் மயக்கமாய் இருந்தபோது காதலைப்பற்றிப் பாடினார்” என்று சொல்லுவதில் கல்கியின் நோக்கம் என்ன என்பதை கல்கியின் வரலாற்றை யோசித்து பார்த்தால் நமக்கு பல விக்ஷயங்கள் புரியும்.   இப்படி எத்தனையோ கல்கியின் பார்வைகளை மறுவாசிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று சிகரம் செந்தில்நாதன் எடுத்துரைக்கிறார்.
     தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் குறித்தும், திரு.வி.க. எழுதிய பெண்ணின் பெருமை நூல் குறித்தும் மறுவாசிப்பு செய்து இவ்விரு நூல்களின் சிறப்பையும், நிறை குறைகளையும் நயமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் செந்தில்நாதன்.
     மேற்குறித்த கட்டுரைகள் தவிர 26 கட்டுரைகளில் மதிப்புரையும், அணிந்துரையும் கலந்து கோர்த்துள்ளார்.  ஒவ்வொரு கட்டுரையும் சமூக நோக்கில் விரிந்த ஆழ்ந்த பார்வையில் சுருக்கமாகவும், சுவையாகவும் குறை நிறைகளை நயம்பட உரைப்பதாகவும் உள்ளன.
                                   …நன்றி…
                             புதிய புத்தகம் பேசுது

Friday, 7 December 2012

இனியனின் ‘ சமயங்களின் பின்புலத்தில் தமிழக வரலாறு ’

                      நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழகத்தின் வரலாறு, சமய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது.  சங்க காலத்திலேயே சமயக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன எனினும், சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, அவை விரைந்து தலைதூக்குகின்றன.  பல்லவர் காலம்,பிற்காலச் சோழ, பாண்டியர் காலம், நாயக்கர் காலம் என்பனவெல்லாம் சமயங்களின் ஆட்சி நடந்த காலம் என்றே கூற வேண்டும்.  அதனால்தான் இடதுசாரியரான வழக்குரைஞர் ச.செந்தில்நாதன், அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை என்னும் நூலில், தமிழக வரலாற்றைச் சமயப் பின்புலத்தில் ஆய்வு செய்கின்றார்.

                       மூவேந்தர் ஆட்சிக் காலம் முடிந்து, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் தொடங்கிய காலம் வரையிலான இடைக்கட்டம் பல்வேறு மரபுகளைச் சார்ந்த மன்னர்களால் ஆளப்பட்டது.  அக்காலகட்டத்தையே தன் ஆய்வுப் பொருளாக நூலாசிரியர் அமைத்துக் கொண்டுள்ளார்.  இசுலாமியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் எனப் பலரும் தமிழகத்தை ஆண்ட காலம் அது.  தமிழ்மொழி தன் செல்வாக்கு இழந்து, பிற மொழிகள் கோலோச்சிய காலம் என்றும் அதனைக் கூறலாம்.  அந்நிலையில் தமிழைத் தாங்கிப் பிடித்தவர்கள், சமயங்களின் மீது நம்பிக்கை கொண்ட புலவர்கள் சிலரே என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகின்றது.

                         அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  கி.பி.1424 முதல் 1447 வரை ஆட்சி நடத்திய விஜயநகர மன்னன் இரண்டாம் தேவராயனின் காலத்தில் அவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.  எனினும் அருணகிரிநாதரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் குறைவாகவும், கற்பனைக் கதைகளே கூடுதலாகவும் நமக்குக் கிடைக்கின்றன.  அவருடைய பாடல்களைக் கொண்டே நாம் சில ஆய்வுகளை நிகழ்த்த வேண்டியுள்ளது.

                            அருணகிரிநாதரின் முருக வணக்கப் பாடல்கள் வெறும் ஆன்மீகம் என்று நாம் ஒதுங்கி விட முடியாது.  அங்கொன்றும் இங்கொன்றும்க சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய செய்திகள் காணப்பட்டாலும், பிறகு முருக வழிபாடு அருகிலேயே காணப்பட்டது.  சமண பவுத்த காலங்களும், சைவ வைணவக் காலங்களுமாய்த் தமிழக வரலாறு நடை போட்டது.  முருகன் சைவ மரபைச் சார்ந்து வழிபடப்பட்டாலும், அங்கு சிவனுக்கே முற்றும் முதலான முதல் இடம் வழங்கப்பட்டது.  கச்சியப்ப முனிவர் படைத்தளித்த, கந்த புராணம் கூட, பார்ப்பன மயமாக்கப்பட்ட கந்தனையும், கார்த்திகேயனையுமே நமக்குக் காட்டுகின்றது.  முருகன் அங்கே தென்படவில்லை.


                              தமிழ்க் கடவுள் என்று நமப்ப்பட்ட முருகனை அருணகிரிநாதரே மீண்டும் அரங்கிற்கு அழைத்து வருகிறார்.  பல்வேறு புதிய புதிய சந்தங்களில் அவர் படைத்த பாடல்கள் முருக வழிபாட்டை மட்டும் மேம்படுத்தவில்லை, தமிழ் உணர்வையும் சேர்த்தே மேம்படுத்தியது என்பது செந்தில்நாதன் முன்வைக்கும் வாதம்.  அருணகிரிநாதரின் குரல் தமிழ்க் குரல் என்கிறார் அவர்.

                              சைவ ஆதீனங்கள் என்று கூறப்படும் சைவ மடங்கள் குறித்துப் பல அரிய தகவல்களை இந்நூல் தருகின்றது.  பிற்காலச் சோழர்கள் சைவ மதத்தை உயர்த்திப் பிடித்தார்கள் என்று நாம் படிக்கிறோம்.  ஆனால் அவர்கள் உயர்த்திப் பிடித்தது சித்தாந்த சைவமன்று, வைதீகச் சைவமே என்பதைச் சான்றுகளுடன் இந்நூல் நிறுவுகிறது.  அதனால்தான் சைவ மதங்கள் எவையும் சோழர் காலத்தில் கட்டப்படவில்லை.  வைணவ சமயத்தைச் சார்ந்து நின்ற நாயக்க மன்னர்களின் காலத்திலேதான் அம்மடங்கள் உருவாகியுள்ளன.  இது ஒரு பெரிய வரலாற்று முரணாகும்.  பார்ப்பனர்களால் வழிநடத்தப்பட்ட சோழ மன்னர்கள், பார்ப்பனர்கள் மட்டுமே மடங்களை நடத்த வேண்டும் என்னும் போலிக்கோட்பாட்டுக்கு உடன்பட்டனர்.  பார்ப்பனர் அல்லாதார் கட்டிய சில மடங்களை இடித்தும் இருக்கிறார்கள்.  இதனையே வரலாற்று ஆசிரியர்கள் குகையிடிக் கலகம் என்று அழைக்கின்றனர்.

                               தமிழ்நாட்டில் 18 சைவ மடங்கள் இருந்தன என்று குறிப்புகள் உள்ளன.  எனினும் இன்றைக்கு ஏழு மடங்கள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.  இராமேசுவர ஆதீனம், சிவப்பிரகாச ஆதீனம் போன்றவை இன்று முற்றிலுமாய் அழிந்து விட்டன.  வேறு சில மடங்கள் பெயரளவில்தான் இருக்கின்றன.

                               தாயுமானவர், குமரகுருபரர், சிவப்பிரகாசர், அண்ணாமலை ரெட்டியார் ஆகியோரைப் பற்றியும் பல குறிப்புகள் நூலுள் இடம் பெற்றுள்ளன.  இறுதி இயல் வள்ளலாரைப் பற்றி விரிவாகவும், நிறைவாகவும் பேசுகின்றது.  சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய இராமலிங்க அடிகளாரே,  இன்றைய தமிழ்த் தேசியக் கோட்பாட்டின் வேராக விளங்குகின்றார் என்பதும் இந்நூலில் காணப்படும் செய்தி.


         -சிகரம்.ச.செந்தில்நாதன் எழுதிய‘அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை’ என்னும் நூல்  பற்றி இனியன்.


                                                                                                                    நன்றி,

                                                                                                        கருஞ்சட்டைத்தமிழர்

Monday, 3 December 2012

பாலாவின் "பரதேசி"யில் காப்புரிமை மீறலா?

          பாலாவின் இயக்கத்தில் "பரதேசி" மிக விரைவில் தெருவுக்கு வரப் போகிறதாம்.  விளம்பரங்கள் பலமாக இருக்கின்றன.  மூலக்கதை பற்றி மட்டும் யாரும் மூச்சு விடுவதில்லை.  பத்திரிகைச் செய்திகளிலிருந்தும் படம் பற்றிய சில பேட்டிகளிலிருந்தும், பரதேசியின் கதை தேயிலைத் தோட்டம் பற்றியது என்பது தெரிய வருகிறது.  இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையைப் படம் பேசுகிறதாம்.  அடிமைகளாக நடத்தப்பட்ட அவர்கள் அனுபவித்த கொடுமைகள் சித்தரிக்கப்படுகிறதாம்.  ஆக, அது தேயிலைத் தோட்ட அசல் வாழ்க்கையைப் பற்றி சுமார் முப்பத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாவலாசிரியர் டி.செல்வராஜ் எழுதிய "தேனீர்" நாவலின் தழுவல் தான் ‘பரதேசி’ என்ற கருத்து இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.  நாவலாசிரியர் செல்வராஜீம் இன்னும் தகவல் அறிந்த பலரும் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.  தன் படைப்பின் காப்புரிமை அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது என்று நாவலாசிரியர் கூறுகிறார்.  காப்புரிமை மீறப்பட்டிருக்கிறது என்பது உறுதியானால் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவும் அவர் தயாராகிறார். 

Thursday, 29 November 2012

புராணங்களிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர்

          பழைமைவாதிகளின் கடும் கண்டனத்தைச் சந்தித்த நாவல் சோலை சுந்தரபெருமாளின் 'தாண்டவபுரம்'.  திருஞானசம்பந்தரை நம்பமுடியாத புராணக் கதைகளிலிருந்து மீட்டு, அவர் காலத்திய சமூக, பொருளாதார, சமயப் பின்னணியில் சம்பந்தரின் பணியை உடன் மறையாக, பார்க்கும் நாவல் தாண்டவபுரம்.  திருஞானசம்பந்தர் முன்னெடுத்த சைவத்தை பிராமண மதத்தின் நகலாகப் பார்த்து, சமணம், பவுத்தம் ஆகியவை ஆரிய எதிர்ப்பு மதங்கள் என்று மதிப்பீடு செய்து, அதனால் நகல் சமயமான சைவத்தை நிராகரிக்கும் பகுத்தறிவு வாதபோக்கு ஆழமாக வேர்விட்டிருக்கும் சிந்தனை உலகில் சம்பந்தரின் சைவம் தமிழ் மரபு சார்ந்தது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏற்றம் தருவது என்ற மறுபக்கத்தைச் சித்தரித்துக் காட்டுவது இந்த நாவல்.  சமண சமயம் மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்ததுபோல், சைவ சமயம் மன்னர்களின் ஆதரவைப் பெறாமல் இருந்த நிலையில் விவசாய சமூகத்தின் எழுச்சி ஒரு வரலாற்றுப் போக்காகும் என்பதையும்,  அதில் திருஞான சம்பந்தர் போன்ற சமயத் தலைவர்கள் தோன்றுவதும் இயல்பான போக்கேயாகும் என்பதையும் வரலாற்று நோக்கில் நாவலை வரைந்து காட்டுகிறார் ஆசிரியர்.  சம்பந்தர் சமணத்தை எதிர்கொண்ட விதம் நாவலில் பேசப்படுகிறது.

           
             பெரிய புராணத்திலிருந்து தாண்டவபுரம் வேறுபடுவது தான் நாவலுக்குக்கிளம்பியிருக்கும் எதிர்ப்பிற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.  வடக்கிருந்து வந்த சமணத்தையும், பவுத்தத்தையும் தமிழ்நாட்டுச் சித்தாந்த சைவம் நிராகரித்தது போலவே, அங்கிருந்து வந்த வேதாந்த சைவத்தையும் அடிப்படையில் நிராகரித்தது.  இந்த அம்சத்தை ஆசிரியர் தெளிவாக நாவலில் கொண்டு வந்திருக்கிறார்.  வேற்றுமையில் ஒற்றுமை காணவிரும்பாத இந்துத்துவ சக்திகள் இந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பைக் காட்டுவதற்கு இதுவே அடிப்படைக் காரணம்.  இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் ஆதீனங்கள் அமர்க்களம் செய்கின்றனர்.  தமிழ்ச் சைவத்தின் பலவீனமே தமிழ்நாட்டுஆதீனங்கள் தான்.


               இந்துத்துவ வாதிகள் மற்றும் அவர்களின் குணத்தைப் புரிந்து கொள்ளாத சைவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பைக் காட்டுவதற்கு திருஞானசம்பந்தர் மனோன்மணி என்ற கணிகையுடன் வாழ்ந்தார் என்ற நாவலின் சித்தரிப்பு ஒரு முக்கிய காரணம்.  இந்தச் சித்தரிப்பை அவர்கள் விரும்பாதிருக்கலாம்.  ஆனால் தமிழையும், சித்தாந்த சைவத்தையும் தூக்கிப் பிடிக்கும் நாவலை அவர்களால் எப்படி விரும்பாமல் இருக்க முடிகிறது?  மண் சார்ந்து மொழியும், சமயமும் வளர்வதை, அந்தப் போராட்டத்தைச், சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  திருஞான சம்பந்தரை மனோன்மணி என்ற கணிகையுடன் சம்பந்தப்படுத்துவது ஒரு மாபெரும் குற்றம் என்றால், அந்தக் குற்றத்தைச் செய்த சுந்தரரை என்ன செய்வது?  சேக்கிழர் மீது அவதூறு வழக்கு போட முடியுமா?  சுத்நதரருக்கு ஏற்பட்ட அனுபவத்தை சம்பந்தருக்கும் விரிவாக்கிவிட்டார் சோலை சுந்தர பெருமாள்.

                 இதற்குத் தானா இவ்வளவு கூச்சல்?

                  சேக்கிழாருக்கு பெரிய புராணம் எழுத உரிமை இருந்தால், சோலை சுந்தர பெருமாளுக்கும் தாண்டவபுரம் எழுத உரிமை உண்டு. சின்ன புராணத்தை, தன் காலத்தின் சமூகத் தேவை கருதி சேக்கிழார் பெரிய புராணமாக்கினார்.   சம்பந்தர் காலத்தை சமூக வரலாற்றுப் போக்கின் பின்னணியில் சோலை சுந்தர பெருமாள் நாவலாக்கிவிட்டார்.  புராணம் அக்கால வடிவம், நாவல் இக்கால வடிவம்.


                    திருஞான சம்பந்தர் காலத்திற்கும் சேக்கிழார் காலத்திற்கும் இடையில் கிட்டதட்ட 500 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன.  சேக்கிழார் காலத்திற்கும் சோலை சுந்தரபெருமாள் காலத்திற்கும் இடையில் கிட்டதட்ட 700 அல்லது 800 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன.  சமூக அறிவியல் பார்வை கொள்ள சேக்கிழாருக்கு வாய்ப்பில்லை.  சோலை சுந்தர பெருமாளுக்கு அந்த வாய்ப்பு உண்டு.  அதை அவர் பயன்படுத்திக் கொண்டார்.


                     ஒரு படைப்பைப் பற்றிப் பேசும்போது படைப்பாளியின் நோக்கம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.  அது விமர்சன தர்மம்.  சரியான அணுகுமுறை.   தன்னுடைய நோக்கத்தை இன்னொருவர் படைப்பில் தேடலாகாது.  சோலை சுந்தர பெருமாள் ஒரு நீண்ட முன்னுரை எழுதியிருக்கிறார்.  அது அவருடைய சமூக வரலாற்றுப் புரிதலையும், படைப்பின் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.  நிலவுடைமைச் சமுதாயத்தின் வளர்ச்சி வரலாற்றில் தவிர்க்க முடியாதது.  தமிழ் மண்ணில் நிலவுடைமைச் சமூகம் வளரும்போது, மண்ணின் மொழியையும் மண்ணுக்குரிய சமயத்தையும் காக்கவும், வளர்க்கவும் வேண்டியிருக்கிறது.  அதேசமயம் வடக்கிருந்து வந்த பவுத்த, சமண, வேதாந்த சமயங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  இந்தக் காலகட்டத்தை,  அது பேசும் உண்மைகளை ஏன் மறுதலிக்க வேண்டும்?  தாண்டவபுரத்தை சமுதாய வரலாற்றுப் பார்வையில் மதிப்பிடாமல், வேறு பார்வையில் பார்ப்பது சரியாகாது.  வடையை எண்ணச் சொன்னால், வடையின் ஓட்டைகளை எண்ணக்கூடாது.  எண்ணினால் கணக்கு தவறாக வரும்.


                      சைவ எழுச்சியை சோலை சுந்தரபெருமாள் ஒரு பக்தனாக நாவலில் முன்வைக்கவில்லை என்பதைப் புதுமைவாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.  பெரிய புராணம் காட்டுகிற திருஞான சம்பந்தரின் வாழ்க்கையை நாவலாக்கவில்லை ஆசிரியர்.  அதற்கு மெருகூட்ட அவர் முயலவில்லை.  சம்பந்தர் பற்றிய நம்ப முடியாக நிகழ்வுகளையும், சித்தரிப்புகளையும் ‘தாண்டவபுரம்’  நிராகரித்துவிட்டது.

                       நிலவுடைமைச் சமுதாயம் தன்னைக் கட்டமைத்துக் கொள்வது என்பது வரலாற்றின் தவிர்க்க முடியாத போக்காகும்.  தமிழ்நாட்டில் அந்தப் போக்கு தமிழ் மொழியையும், தமிழர் சமய மரபையும் உயர்த்திப் பிடித்தது.  சமயத்தை வாழ்க்கையோடு பிணைத்தது.  சமண, பவுத்த, வேதாந்த சமய மரபுகள் தமிழ் மண்ணில் கால் ஊன்றி வளரத் தொடங்கியபோது, சொந்த மண்ணின் மொழியும், சமயமும் அவற்றின் சவாலை ஏற்றன.  அந்தச் சவாலைச் சொல்வது தான் தாண்டவபுரம்.


                                                                                                                                 நன்றி
                                                                                                                  புதிய புத்தகம் பேசுது