Monday 25 February 2013

தோலுக்கு விருது பெற்ற தோழர்


               தோலுக்கு விருது பெற்ற தோழர்

     சாகித்திய அகாதமி 1955-லிருந்து விருதுகள் தருகின்றன.  முதல் விருது சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளைக்குக் கிடைத்தது என்றாலும் விருது பெற்றவர்கள் பட்டியலைப் பார்க்கும் போது நாவலாசிரியர்களே அதிக விருதுகளை அள்ளிச்சென்றிருப்பதைக் காணமுடியும்.  நாவலாசிரியர்களிலும் உணர்வுப் பூர்வமான முற்போக்கு எழுத்தாளர்களை நோக்கி விருதுகள் பயணிக்கத் தொடங்கியது மிகவும் பின்னால் தான்.  வணிக ஏடுகளில் வாழ்க்கையை, சமுதாயத்தை, மக்களின் போராட்டங்களை முன்னிறுத்தாத பல தொடர்கதைகளும் விருதுகளை வாங்கி இருக்கின்றன.  அந்தப் போக்கு பிற்பட்ட காலத்தில் முறியடிக்கப்பட்டது. இந்த ஆண்டு டி.செல்வராஜின் ‘தோலுக்கு‘ விருது கிடைத்திருக்கிறது.  பொதுவாக, முற்போக்குப் படைப்புகள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு தற்போது விருதுகள் பெறுகின்றன.  இது எப்படிச் சாத்தியமாயிற்று என்று செல்வராஜைக் கேட்டபோது, ’இலக்கிய உலகில் நாம் நடத்திய நெடிய போராட்டத்தால் சாத்தியமாயிற்று’ என்றார்.  விருதுகள் வீடு தேடி வர வேண்டுமானால், இலக்கிய உலகில் நாடு தழுவி போராட வேண்டியிருக்கிறது என்றார்.  மேலும் விருதை தனிப்பட்ட முறையில் தனக்குக் கிடைத்ததாக அவர் பார்க்கவில்லை.  தான் சார்ந்த இயக்கத்திற்குக் கிடைத்த விருதாகவே பார்த்தார்.  அது அவர் அடக்கத்தைக் காட்டுகிறது.  அதே சமயம் புறந்தள்ள முடியாத போராளிப் படைப்பாளியாக அவர் நின்று காட்டியதை அங்கீகரிக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது என்பதையும் சொல்லாமல் சொல்கிறது அல்லவா?

     நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே செல்வராஜின் ’மலரும் சருகும்’ என்ற நாவல் தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்துவிட்டது.  அடுத்து சில ஆண்டுகளில் வெளிவந்தத் ’தேனீர்’ சிறந்த நாவல் என்ற பெயரைக் கொள்முதல் செய்துவிட்டது.  இந்த இரண்டு நாவல்களிலுமே அவர் உயரத்திற்குப் போய்விட்டார்.  செல்வராஜின் உயரத்தைத் தொட விருதுகள் தான் ஆமை வேகத்தில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தன. விருது கிடைத்தது தாமதமாகத்தான்.  இருந்தாலும் ஒரு ஆறுதல்.  பாரதிதாசன், கண்ணதாசன் போல் கருமாதிக்குப் பிறகு தரப்படவில்லை அல்லவா?

     நாவலாசிரியராக அறியப்பட்டாலும், முதலில் சிறுகதைதான் எழுதினேன் என்கிறார் செல்வராஜ்.  ஆனால் என்ன கொடுமை.  அந்தச் சிறுகதைகள் அவர் கைவசம் இல்லையாம்.  இது அவருக்கு மட்டுமா இழப்பு?  விருது கிடைத்ததும் செல்வராஜை ஓடிப்பிடிப்பதும், வர்ணனை செய்வதும் ஊடகங்களின் வாடிக்கையாகிவிட்டது.  இது ஆரோக்கியமான போக்கு அல்ல.  அவரை முன்பே அடையாளம் கண்டிருக்க வேண்டும்.

     நசுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்றால்,  அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து சங்கம் கண்டார்கள் என்பதைச் சொல்ல வேண்டும் அந்தச் சங்கத்திற்கு வழிகாட்டும் தத்துவம் பற்றிப் பேச வேண்டும்.  அந்தத் தத்துவம் தமிழ்நாட்டில் வளர்ந்து கட்டமைத்துக் கொண்ட வரலாற்றைச் சொல்ல வேண்டும்.  இதை ’தோல்’ சரியாகச் சொல்கிறது.  இதற்குக் களமாக நவீன தொழிற்சாலைகளைக் கொள்ள முடியாது.  அதனால்தான் நாவல் பின்நோக்கிச் சென்று 1930கள் முதல் 1950களின் கடைசி வரை படர்ந்து செல்கிறது.                 வர்க்கப் போராட்டத்தோடு சாதி ஒழிப்பை இணைக்கவேண்டும் என்பது இன்றைய குரல் என்றாலும், அன்றே நடைமுறையில் இருந்தது என்பதை செல்வராஜ் என்னும் படைப்பாளி உணர்ந்திருந்தார்.  அதற்கு ஆதாரம் தான் தோல்.  எனவே இது முற்போக்கு இலக்கியத்திலும் ஒரு திருப்புமுனை.  ’தோல்’ நாவலுக்கு செல்வராஜ் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்.  அது பற்றிக் கேட்ட போது, ’தோல் நாவல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என்னுடைய முன்னுரை’ என்றார்.  உண்மைதான், நாவலின் கதை மாந்தர்கள் வீரர்கள் அல்லர்,   வஞ்சிக்கப்பட்டவர்களே என்று ரோமண்ட் வில்லியம்சை மேற்கோள் காட்டி முன்னுரையில் பேசுகிறார்.  அதாவது கல்கிகால வரலாற்றுப் புதினங்களைத் தாண்டி நேர் மாறான இலக்கியச் சாலையில் நாவல்கள் முன்னேறிச் செல்கின்றன என்கிறார் அவர்.  அது மட்டுமல்ல, தீண்டாமை எதிர்ப்பு வெறும் சமூகச் சீர்திருத்தமாகப் பார்க்கப்பட்டது போய், அது பழங்கதையாய் மரித்துப் போய் வர்க்கப் போராட்டமாய், சமூக விடுதலையாய் பரிணாமம் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.  தோல் ஒரு வர்க்கப் போராட்ட நாவலாகவும், தலித் நாவலாகவும்,  கம்யூனிச இயக்கத்தின் ஒரு முப்பது ஆண்டுகால வரலாற்றைப் பதிவு செய்யும் நாவலாகவும் அடைந்திருக்கிறது.  எனவே நாவலின் பரப்பளவு அதிகமாகத்தானே இருக்க வேண்டும்?  அதற்கு ஏற்ப பாத்திரங்கள் இடம் பெற வேண்டாமா?

     ’தோல்’  நாவலில் 117 பாத்திரங்கள் உட்புகுந்து நாவலை இயக்குகின்றன.  இவ்வளவு பாத்திரங்கள் உள்ள நாவல் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  எண்ணற்ற பாத்திரங்கள் இருப்பது ஒரு காவியப் பண்பு.  அந்த பண்பு இந்த நாவலில் இருக்கிறது.  காவியம் அரண்மனைகளையும், அந்தப்புரங்களையும் பேசும்,  ஆனால் ’தோல்’ தோழர்களின் போர்க்குணத்தையும், தியாகத்தையும் பேசுகிறது.  பல பாத்திரங்கள் உண்மைப் பாத்திரங்கள்,  நேற்று வாழ்ந்த மனிதர்கள்.

     பொதுவுடைமைக்கட்சி வெள்ளைக்காரன் ஆட்சியில் மட்டும் அல்ல, சுதந்திர இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது.  1952 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பெற்ற வெற்றிக்குப் பிறகு தடை விலக்கப்பட்டது.  உழைக்கும் மக்களின் விடுதலைக்காகத் தங்களை அர்பணித்துக் கொண்ட தலைவர்கள், தங்கள் திருமண வாழ்க்கையை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.  தடை விலக்கப்பட்ட பிறகு திருமண வாழ்க்கையையும் மேற்கொண்டார்கள், எல்லாம் சாதி மறுப்புத் திருமணங்கள், புரோகிதம் விலக்கிய திருமணங்கள், செல்வராஜ் தன் நாவலைத் திருமணத்தோடும், போராட்டத்தோடும் முடிக்கிறார்.

     ’யார் என்ன கோணத்தில் பார்த்தாலும் என் படைப்பின் நோக்கம் தெளிவானது’  என்கிறார் செல்வராஜ்.
     அவர் படைப்பின் நோக்கம் என்ன?
     சோக்ஷலிச எதார்த்தம்
     அவரின் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா? 
     நிறைவேறி இருக்கிறது.

     இது படிப்பவர்களுக்குத் தெரிகிறது.  ஆனால் படிக்காத (அதாவது நாவலைப் படிக்காத)  ஜெயமோகனுக்குத் தெரியவில்லை.  பொறாமையில் பாவம் புலம்புகிறார்.  விருது கிடைத்தால் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டியதுதானே என்று ஆலோசனை சொல்கிறார்.  இவருக்கு விருது கிடைத்தால் ஓய்வு எடுத்துக்கொள்வாரா?  இலக்கிய உலகிற்கு உறுதிமொழி அளிப்பாரா?  ஒரு நல்ல இலக்கியவாதி இப்படி எல்லாம் பேசக்கூடாது.

     சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து ஓய்வு எடுக்க செல்வராஜ் விருது வாங்கவில்லை.  அடிமை விலங்கை உடைத்து நொறுக்குவதற்க விருதை ஒரு சுத்தியலாக அவர் பயன்படுத்துவார்.  சாகித்திய அகாதமி தன்னை அறியாமலே ஒரு ஆயுதத்தை டி.செல்வராஜீக்கு வழங்கி இருக்கிறது.

1 comment:

  1. i am eager to know the comments of jeyamohan about thol.

    ReplyDelete