Thursday, 29 November 2012

புராணங்களிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர்

          பழைமைவாதிகளின் கடும் கண்டனத்தைச் சந்தித்த நாவல் சோலை சுந்தரபெருமாளின் 'தாண்டவபுரம்'.  திருஞானசம்பந்தரை நம்பமுடியாத புராணக் கதைகளிலிருந்து மீட்டு, அவர் காலத்திய சமூக, பொருளாதார, சமயப் பின்னணியில் சம்பந்தரின் பணியை உடன் மறையாக, பார்க்கும் நாவல் தாண்டவபுரம்.  திருஞானசம்பந்தர் முன்னெடுத்த சைவத்தை பிராமண மதத்தின் நகலாகப் பார்த்து, சமணம், பவுத்தம் ஆகியவை ஆரிய எதிர்ப்பு மதங்கள் என்று மதிப்பீடு செய்து, அதனால் நகல் சமயமான சைவத்தை நிராகரிக்கும் பகுத்தறிவு வாதபோக்கு ஆழமாக வேர்விட்டிருக்கும் சிந்தனை உலகில் சம்பந்தரின் சைவம் தமிழ் மரபு சார்ந்தது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏற்றம் தருவது என்ற மறுபக்கத்தைச் சித்தரித்துக் காட்டுவது இந்த நாவல்.  சமண சமயம் மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்ததுபோல், சைவ சமயம் மன்னர்களின் ஆதரவைப் பெறாமல் இருந்த நிலையில் விவசாய சமூகத்தின் எழுச்சி ஒரு வரலாற்றுப் போக்காகும் என்பதையும்,  அதில் திருஞான சம்பந்தர் போன்ற சமயத் தலைவர்கள் தோன்றுவதும் இயல்பான போக்கேயாகும் என்பதையும் வரலாற்று நோக்கில் நாவலை வரைந்து காட்டுகிறார் ஆசிரியர்.  சம்பந்தர் சமணத்தை எதிர்கொண்ட விதம் நாவலில் பேசப்படுகிறது.

           
             பெரிய புராணத்திலிருந்து தாண்டவபுரம் வேறுபடுவது தான் நாவலுக்குக்கிளம்பியிருக்கும் எதிர்ப்பிற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.  வடக்கிருந்து வந்த சமணத்தையும், பவுத்தத்தையும் தமிழ்நாட்டுச் சித்தாந்த சைவம் நிராகரித்தது போலவே, அங்கிருந்து வந்த வேதாந்த சைவத்தையும் அடிப்படையில் நிராகரித்தது.  இந்த அம்சத்தை ஆசிரியர் தெளிவாக நாவலில் கொண்டு வந்திருக்கிறார்.  வேற்றுமையில் ஒற்றுமை காணவிரும்பாத இந்துத்துவ சக்திகள் இந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பைக் காட்டுவதற்கு இதுவே அடிப்படைக் காரணம்.  இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் ஆதீனங்கள் அமர்க்களம் செய்கின்றனர்.  தமிழ்ச் சைவத்தின் பலவீனமே தமிழ்நாட்டுஆதீனங்கள் தான்.


               இந்துத்துவ வாதிகள் மற்றும் அவர்களின் குணத்தைப் புரிந்து கொள்ளாத சைவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பைக் காட்டுவதற்கு திருஞானசம்பந்தர் மனோன்மணி என்ற கணிகையுடன் வாழ்ந்தார் என்ற நாவலின் சித்தரிப்பு ஒரு முக்கிய காரணம்.  இந்தச் சித்தரிப்பை அவர்கள் விரும்பாதிருக்கலாம்.  ஆனால் தமிழையும், சித்தாந்த சைவத்தையும் தூக்கிப் பிடிக்கும் நாவலை அவர்களால் எப்படி விரும்பாமல் இருக்க முடிகிறது?  மண் சார்ந்து மொழியும், சமயமும் வளர்வதை, அந்தப் போராட்டத்தைச், சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  திருஞான சம்பந்தரை மனோன்மணி என்ற கணிகையுடன் சம்பந்தப்படுத்துவது ஒரு மாபெரும் குற்றம் என்றால், அந்தக் குற்றத்தைச் செய்த சுந்தரரை என்ன செய்வது?  சேக்கிழர் மீது அவதூறு வழக்கு போட முடியுமா?  சுத்நதரருக்கு ஏற்பட்ட அனுபவத்தை சம்பந்தருக்கும் விரிவாக்கிவிட்டார் சோலை சுந்தர பெருமாள்.

                 இதற்குத் தானா இவ்வளவு கூச்சல்?

                  சேக்கிழாருக்கு பெரிய புராணம் எழுத உரிமை இருந்தால், சோலை சுந்தர பெருமாளுக்கும் தாண்டவபுரம் எழுத உரிமை உண்டு. சின்ன புராணத்தை, தன் காலத்தின் சமூகத் தேவை கருதி சேக்கிழார் பெரிய புராணமாக்கினார்.   சம்பந்தர் காலத்தை சமூக வரலாற்றுப் போக்கின் பின்னணியில் சோலை சுந்தர பெருமாள் நாவலாக்கிவிட்டார்.  புராணம் அக்கால வடிவம், நாவல் இக்கால வடிவம்.


                    திருஞான சம்பந்தர் காலத்திற்கும் சேக்கிழார் காலத்திற்கும் இடையில் கிட்டதட்ட 500 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன.  சேக்கிழார் காலத்திற்கும் சோலை சுந்தரபெருமாள் காலத்திற்கும் இடையில் கிட்டதட்ட 700 அல்லது 800 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன.  சமூக அறிவியல் பார்வை கொள்ள சேக்கிழாருக்கு வாய்ப்பில்லை.  சோலை சுந்தர பெருமாளுக்கு அந்த வாய்ப்பு உண்டு.  அதை அவர் பயன்படுத்திக் கொண்டார்.


                     ஒரு படைப்பைப் பற்றிப் பேசும்போது படைப்பாளியின் நோக்கம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.  அது விமர்சன தர்மம்.  சரியான அணுகுமுறை.   தன்னுடைய நோக்கத்தை இன்னொருவர் படைப்பில் தேடலாகாது.  சோலை சுந்தர பெருமாள் ஒரு நீண்ட முன்னுரை எழுதியிருக்கிறார்.  அது அவருடைய சமூக வரலாற்றுப் புரிதலையும், படைப்பின் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.  நிலவுடைமைச் சமுதாயத்தின் வளர்ச்சி வரலாற்றில் தவிர்க்க முடியாதது.  தமிழ் மண்ணில் நிலவுடைமைச் சமூகம் வளரும்போது, மண்ணின் மொழியையும் மண்ணுக்குரிய சமயத்தையும் காக்கவும், வளர்க்கவும் வேண்டியிருக்கிறது.  அதேசமயம் வடக்கிருந்து வந்த பவுத்த, சமண, வேதாந்த சமயங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  இந்தக் காலகட்டத்தை,  அது பேசும் உண்மைகளை ஏன் மறுதலிக்க வேண்டும்?  தாண்டவபுரத்தை சமுதாய வரலாற்றுப் பார்வையில் மதிப்பிடாமல், வேறு பார்வையில் பார்ப்பது சரியாகாது.  வடையை எண்ணச் சொன்னால், வடையின் ஓட்டைகளை எண்ணக்கூடாது.  எண்ணினால் கணக்கு தவறாக வரும்.


                      சைவ எழுச்சியை சோலை சுந்தரபெருமாள் ஒரு பக்தனாக நாவலில் முன்வைக்கவில்லை என்பதைப் புதுமைவாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.  பெரிய புராணம் காட்டுகிற திருஞான சம்பந்தரின் வாழ்க்கையை நாவலாக்கவில்லை ஆசிரியர்.  அதற்கு மெருகூட்ட அவர் முயலவில்லை.  சம்பந்தர் பற்றிய நம்ப முடியாக நிகழ்வுகளையும், சித்தரிப்புகளையும் ‘தாண்டவபுரம்’  நிராகரித்துவிட்டது.

                       நிலவுடைமைச் சமுதாயம் தன்னைக் கட்டமைத்துக் கொள்வது என்பது வரலாற்றின் தவிர்க்க முடியாத போக்காகும்.  தமிழ்நாட்டில் அந்தப் போக்கு தமிழ் மொழியையும், தமிழர் சமய மரபையும் உயர்த்திப் பிடித்தது.  சமயத்தை வாழ்க்கையோடு பிணைத்தது.  சமண, பவுத்த, வேதாந்த சமய மரபுகள் தமிழ் மண்ணில் கால் ஊன்றி வளரத் தொடங்கியபோது, சொந்த மண்ணின் மொழியும், சமயமும் அவற்றின் சவாலை ஏற்றன.  அந்தச் சவாலைச் சொல்வது தான் தாண்டவபுரம்.


                                                                                                                                 நன்றி
                                                                                                                  புதிய புத்தகம் பேசுது                      

Sunday, 25 November 2012

படிக்க வேண்டிய ஒரு புத்தகம்

                                 

            அனைவரும் படிக்க வேண்டிய, குறிப்பாக இடதுசாரிகள் படிக்க வேண்டிய ஒரு முக்கிய நூல் அண்மையில் வெளிவந்துள்ளது.  அந்த நூல்ஆங்கில நூல்.  'Socialism is the future" என்று சோஷலிசத்திற்கே எதிர்காலம் என்று அடித்துச் சொல்லும் நூல்.  டாக்டர்.ரெக்ஸ் சற்குணம் எழுதியிருக்கிறார்.

                                         எதிர்காலம் சோஷலிசத்திற்கே என்று நாம் சொல்லவேண்டுமானால், நமக்கு சோஷலிசம் பல நாடுகளில் வளர்ந்த வரலாறு, வீழ்ந்த வரலாறு, இன்று இருக்கும் சோஷலிச நாடுகளின் நிலைமை முதலியன நமக்கு தெரியவேண்டும் அல்லவா?  அந்த வரலாறுகள் எல்லாம் இந்த நூலில் அடங்கியிருக்கின்றன.  இந்த வரலாறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால்தான் எதிர்காலம் சோஷலிசத்திற்கே என்று மார்த்தட்டி உரத்த குரலில் பேசமுடியும்.  அதற்குத் துணை புரியும் நூல் இது.  அந்த வகையில் இது ஒரு சிறிய கலைக் களஞ்சியம்.  சீனாவின் இன்றைய நிலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ரெக்ஸ்.சற்குணம்.  அவர் எழுதுகிறார்,

                                  "Mao had wanted to create a new man - Communist man : But today Socialist China has created only a capitalist man"

                                   இப்படி சொல்லும் ஆசிரியர் மாவோவின் மீதும் தன் விமர்சனப் பார்வையை செலுத்தத் தவறவில்லை.  மாவோவின் கலாச்சாரப் புரட்சி கட்டுப்பாட்டை இழந்ததன் விளைவுகளைச் சுட்டுக்காட்டுகிறார்.

                               " Let a hundred flowers bloom, a hundred schools of thought contend"

                                  என்று சொன்ன மாவோவை, லெனினை எந்த உயர்ந்த பீடத்தில் வைத்துப் பார்க்கிறாரோ அப்படியே மாவோவையும் வைத்துப் பார்க்கிறார்.

                                    மனித குல வரலாற்றில் மனிதனே மனிதனைச் சுரண்டும், சுரண்டல் சமுதாயததிற்கு முற்றுப் புள்ளி வைத்த சோவியத் யூனியனின் எழுச்சி பற்றியும், பின்னர் அதன் வீழ்ச்சி பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  ஸ்டாலினின் சொல்லும் செயலும் மாறுபட்டதன் விளைவு, பொது வுடைமைக் கட்சியின் மேன்மை என்ற கோட்பாடு, மற்ற நிர்வாகம், நீதித்துறை முதலியனவற்றைப் பின்னுக்குத் தள்ள, மக்கள் என்ற பெயரில் சர்வாதிகாரம் நிலை கொண்டதையும், பின்னர் அதுவே சோவியத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.

                                      லத்தீன் அமெரிக்க சோஷலிச நாடுகள் உட்பட பல்வேறு சோஷலிச நாடுகள் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்.  அந்த நாடுகளையும் விமர்சனத்தோடுதான் பார்த்திருக்கிறார்.  இந்தியா பற்றியும் தனியாக ஒரு அத்தியாயம் இருக்கிறது.  அதில் விமர்சனம் மென்னையாக இருக்கும்.

                                         உலக சோஷலிச நாடுகள் பற்றி எல்லாம் எழுதிய டாக்டர்.ரெக்ஸ்.சற்குணம்  எதிர்காலம் சோஷலிசத்திற்கே என்று வாய்ச்சொல் வீரராகச் சொல்லவில்லை.  அது எப்படி சாத்தியம் என்பதையும் சொல்கிறார்.

                                           புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சி இல்லை.  புரட்சி இல்லாமல் சோஷலிச சமுதாய அமைப்பு இல்லை.  எனவே புரட்சிகரமான கட்சி வேண்டியிருக்கிறது.  புரட்சிகரமான கட்சி சாதிக்க வேண்டுமானால் அதற்கு மத்தியத்துவம் (Centralism) இருக்க வேண்டும்.  அது ஜனநாயக மத்தியத்துவமாக (Democratic Centralism) இருக்க வேண்டும்.  இதைத்தான் லெனின் சொன்னார்,ரோசலுக் சம்பர்க் விளக்கம் தந்தார்.  கிராம்சி வழிசாட்டினார்.  இவர்கள் காட்டிய வழியைப் புரிந்து கொண்டு பயணம் மேற்கொண்டால், சோஷலிசம் வெறும் கனவான இருக்காது, எட்டாக் கனியாக இருக்காது, தொடுவானமாக இருக்காது.  மாறாக கனவு மெய்ப்படும்.  இதுதான் இந்த நூலின் செய்தி ;-
                                    " Hence it could be definitely affirmed that for a left party striving for socialism, Leninist's Democratic Centralism within the scope of Rosa Luxemburg's definition on Absolute Freedom and Gramsci's guidelines, is absolutely essential"

இந்த நூலின் விலை ரூ.200/-  பக்கம் 184.  கிடைக்கும் இடம்:  ரோசா வெளியீட்டாளர்கள், எண் 2, இரண்டாவது பிரதான சாலை, கஸ்தூரி பாய் நகர், அடையார், சென்னை - 600 020.









Sunday, 18 November 2012

முனைவர். இரா.காமராசுக்கு வாழ்த்து

                         சாகித்திய அகாதமியின் மத்திய பொதுக்குழு உறுப்பினராக

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் இரா.காமராசு

நியமிக்கப்பட்டிருக்கிறார்.இரண்டு காரணங்களுக்காக இந்த நியமனத்தை

வரவேற்கிறேன்.  முனைவர் இரா.காமராசை வாழ்த்துகிறேன்.  இவர் புதிய

தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது ஒரு காரணம்.  சாகித்திய அகாதமியில்

பல முற்போக்குச் சிந்தனையாளர்கள் இடம் பெற்றிருந்தாலும், தத்துவார்த்த

ரீதியாக தன்னைப் பிணைத்துக் கொண்டவர் அவர்.  தமிழ்நாடு கலை

இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் அல்லவா அவர்?  இந்தத் தகவலை

மட்டும் பல பத்திரிகைகள் சொல்லவில்லை.  ஏன்?

Friday, 16 November 2012

ஒரு சொல்


                         மங்களம் நாவலை வெளியிட்டிருப்பது சந்தியா பதிப்பகம்.  நான் சென்ற ஆண்டு எழுதிய ஒரு நூல் " முருகன் வணக்கத்தின் மறுபக்கம்".  அந்த நூல் பற்றி ஒரு குறிப்பு.
                                       

                                         
                           நாட்டின் மக்கள் இரண்டு வகையில் ஆளப்படுகிறார்கள்.  நாட்டின் நாடாளுமன்றம் மாநிலங்களின் சட்டமன்றம் ஆகியவை இயற்றும் சட்டங்கள், நிர்வாகம் செய்யும் அதிகாரவர்க்கம், சட்டத்தை அமல்படுத்தவும், சட்ட மீறலைத் தடுக்கவும் வல்ல நீதிமன்றம் இவைகளின் மூலம் அரசியல் ரீதியாக மக்கள் ஒரு வகையில் ஆளப்படுகிறார்கள்.  அரசு இயந்திரங்களால் மக்கள் ஆளப்படுவது புறச்சக்திகளின் ஆளுகையாகும்.  மக்கள் இன்னொரு வகையிலும் ஆளப்படுகிறார்கள்.  அதாவது மக்கள் சமூகத்தால் (Civil Society) ஆளப்படுகிறார்கள்.  வேறு சொற்களில் சொன்னால் அகச் சக்திகளால் ஆளப்படுகிறார்கள்.  அகச் சக்திகள் மக்களின் நம்பிக்கைகள்.  அவைகள் ஒன்றல்ல, இரண்டல்ல பல.  கடவுள் பக்தி, நாள் பார்த்தல், நட்சத்திரம் பார்த்தல், ராகுகாலம், எமகண்டம், அக்ஷ்டமி, நவமி, தெய்வக்குற்றம், வேண்டுதல், பரிகாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கங்கள், வழக்கங்கள், சகுனம், சோதிடம், ஜாதகம், ராசிப்பலன் - இப்படி எண்ணற்ற நம்பிக்கைகள் மக்களுக்கு.  இந்த நம்பிக்கைகளால் அவர்கள் ஆளப்படுகிறார்கள்.  இந்த நம்பிக்கைகளின் வேர்கள் சமயத்திடம் இருக்கிறது. சமயம் இறைவனைச் சார்ந்து இருக்கிறது.  புறச்சக்திகளின் ஆணையை மீறத் தயாராக இருக்கும் மக்கள்கூட அகச்சக்திகளின் ஆணையை மீறத்தயாராக இல்லை.


                         மேலே பார்த்தவைதான் இன்றைய சமூகத்தின் எதார்த்தம்.  இந்தச்சூழ்நிலையில் சமூக மாற்றத்திற்கான எந்த இயக்கமும் சமயத்தின் செல்வாக்கைப் புறம்தள்ள முடியாது.  வெறும் முரட்டுத்தனமான தாக்குதல்களால் மக்களை மாற்றிவிட முடியாது.  மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும்.  சித்தாந்த விவாதமும், போராட்டமும் நடத்தப்பட வேண்டும்.  மக்களைச் சிந்திக்க வைப்பதன் மூலம், சில தெளிவுகளை ஏற்படுத்த முடியும்.


                           புராணக் கதைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் ஆட்பட்ட மக்களை, சமயநிலைப்பாட்டை சமூக வரலாற்று பொருளாதார அறிவியல் பின்னணியில் புரிந்து கொள்வதற்கு நாம் உதவவேண்டும்.  சமயச் சக்திகளுக்குள்ளும் மோதல்கள், முரண்பாடுகள் உண்டு.  மூடப் பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான கலகக்குரல் சமய உலகிலும் உண்டு.  சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம் நிராகரித்திருக்கிறார்கள்.  சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள்.  வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா?

                             இந்த வேறுபாட்டை மேலோட்டமாகப் பார்க்காமல், இவற்றின் வேர்களை மக்களுக்குக் காட்டவேண்டும்.  இந்த முயற்சி சிந்ததனை வளர்ச்சிக்கு உதவும், சித்தாந்த போராட்டத்திற்கு உதவும்.  மறு சிந்தனை, மறுவாசிப்பு, மறுபக்கம் மக்களுக்குப் பழக்கமாக வேண்டும்.  அவை எல்லாம் இருக்கின்றன என்பது தெரியப்படுத்தப்பட வேண்டும்.  மறுசிந்தனையும், மறுவாசிப்பும் மறுபக்கமும் மக்களிடம் ஏற்படும்போது, அவர்கள் மாற்றத்தை நோக்கி நகர்வார்கள்.  பக்திமான்களிலும் பாரதி, விவேகானந்தர், வள்ளலார் போன்ற நெறியினர் உண்டு.  அவர்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.  அதற்கு ஒரு தத்துவ விவாதமும்,கருத்துப் பறிமாற்றமும் தேவை.  அதற்கு நான் எழுதிய முருகன் வணக்கத்தின் மறுபக்கம் உதவும்.


                                தமிழில் அர்ச்சனை, சாதிபாகுபாடு இன்றி அனைத்துமாந்தரும் அர்ச்சகராதல் போன்ற கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்கும் பலர் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள்.  அந்தத் தயக்கம் உடைபட வேண்டும்.  அந்தத் தயக்கத்தை உடைக்க பக்தர்கள் மத்யிலேயே பலர் இருக்கிறார்கள்.  அவர்களை உற்சாகப்படுத்துவதும், உறுதுணையாக இருப்பதும், தார்மீகக் கரம் நீட்டுவதும் காலம் இடும் கட்டளையாகும்.  அந்தக் கட்டளையின் திசைவழிச் செல்ல இந்த நூல் உதவும்.

                                   திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் நூலகர் திரு.ஆறுமுகம் இந்நூல் எழுத பயன்பட்ட பல நூல்களையும் தகவல்களையும் திரட்டிக் கொடுத்தார்.  அவர் என் நன்றிக்கு உரியவர்.  என்னுடைய பல நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் சந்தியா பதிப்பகத்திற்கும், பதிப்பகம் சார்ந்த அன்பர்களுக்கும் என்றும் உண்டு என் நன்றி.

                       

Wednesday, 14 November 2012

பல்லாண்டு காலமாக திறனாய்வுகள் மற்றும் ஆய்வுகள் செய்துவந்த நான் முதன் முதலாக ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். வரும் டிசம்பர் மாதம் நாவல் வெளியாகிறது. நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் பெயர் ‘மங்களம்’.

நீதிமன்ற வழக்கையே முழுமையாக வைத்து எழுதப்படும் முதல் தமிழ் நாவல் இது.