Thursday 17 January 2013

நான் கண்ட சென்னை

                                               நான் கண்ட சென்னை

18.01.2013                                   சிகரம்.ச.செந்தில்நாதன்

     சென்னை நகரம் தோன்றி 360 ஆண்டுகள் ஆனதை முன்னிறுத்தி, சென்னை நகரின் தோற்றம், வளர்ச்சி, அதில் ஏற்பட்டுள்ள சகலவிதமான அக, புற மாற்றங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகி இருக்கின்றன.  என்றாலும் சென்னை பற்றி சொல்ல மறந்த கதைகளும், பார்க்க மறுத்த காட்சிகளும் உண்டு.  அவற்றைச் சொல்லும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

     நான் சென்னைக்கு 1959 ஆம் ஆண்டு வந்தேன்.  திருவாரூரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த நான் மேல் படிப்பிற்காக சென்னையை அடைந்தேன்.  அந்த ஆண்டுகள் கல்லூரிப் படிப்பில் சில மாற்றங்கள் நேர்ந்த ஆண்டுகளாகும்.  கல்லூரிகளில் முன்பெல்லாம் முதலில் இன்டர் மீடியட் என்ற வகுப்பில் படிக்க வேண்டும்.  அது இரண்டு ஆண்டாகும்.  அதை முடித்த பின்னர் தான் பி.ஏ,, பி.எஸ்.சி. போன்ற பட்டப் படிப்பிற்குப் போக வேண்டும்.  அந்தப் பட்டப் படிப்பும் இரண்டு ஆண்டுகள் தான்.  இன்டர் மீடியட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.  கல்லூரிகளில் இருந்த இன்டர் மீடியட் வகுப்பு எடுக்கப்பட்டது.  அதற்குப் பதில் பி.யு.சி. எனப்படும் புகுமுக வகுப்பு நுழைக்கப்பட்டது.  அதுமட்டும் அல்ல, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நுழைவு வகுப்புகள் கல்லூரிகளிலேயே வைக்கப்பட்டன.
     ஏன் இந்த மாற்றம்?
கல்வியாளர்கள் இந்த மாற்றத்தைச் செய்ய சில காரணங்களைச் சொன்னார்கள்!
     அப்போதெல்லாம் கிட்டதட்ட பள்ளிகளில் எல்லாம் தமிழ் வழிக் கல்விதான் உண்டு.  பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள், நேராக இன்டர் மீடியட் சேரும் போது, அதாவது ஆங்கில வழி பயிற்சி மொழிக்கு மாறும் போது சிரமப்படுகிறார்கள் என்றும், அதனால் இன்டர் மீடியட் என்னும் இரண்டாண்டு படிப்பிற்குப் பதில் பட்டப் படிப்பை மூன்றாண்டாக்கி,  ஓராண்டு புகுமுக வகுப்பைக் கொண்டுவந்து, இன்டர் மீடியட் படித்து பாதியில் கல்லூரிப் படிப்பை விடுவதைவிட, ஓராண்டு படித்து ஓடிவிடட்டும் என்று நினைத்தார்கள்.  ஆங்கில வழிக் கல்விக்கும், கல்லூரி வாழ்க்கைக்கும் மாணவன் பக்குவப்பட வேண்டும் என்றும் நினைத்தார்கள்.  இந்தத் திட்டம் நல்ல திட்டம் அல்ல.  அதனால்தான் பின்னர் புகுமுக வகுப்பு ஒழிக்கப்பட்டது.  அதற்குப் பதில் பள்ளி இறுதி வகுப்பிற்குப்பின்  +2 கொண்டுவந்தார்கள்.  இன்டர் மீடியட் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.  அந்த இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வந்த மாணவர்களுக்கு ஆங்கில வழியில் பயிற்சி பெறவும் கல்லூரிக் கலாச்சாரத்தோடும், வாழ்வோடும் இணைவதற்கும் தேவைப்பட்டது.

     நான் புகுமுக வகுப்பில் சேர்ந்தேன்.  சென்னை வாழ்க்கை எனக்குப் புதியது.  சென்னைத் தமிழ் மேலும் புதியது.

     சென்னை நனரில் கணிசமான அளவு தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருந்தார்கள்.  அவர்கள் வெளியில் தமிழ் பேசினாலும் வீட்டில் தெலுங்கு பேசுவார்கள்.  என்றாலும் தெலுங்கின் செல்வாக்கு நடை முறையில் இருந்தது.  ஆற்காட்டு நவாபுகள் கட்டுப்பாட்டிலும், பின்னர் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலும் நகரம் இருத்ததும் மொழியில் தெரிந்தது.  பிற மாவட்டங்களிலிருந்து, குறிப்பாக ஆந்திரா பிரிந்த பிறகு, சென்னைக்குக் குடியேறியவர்களால் சென்னை மொழி மாற்றம் கண்டது என்று சொல்லலாம்.  தமிழ் நாட்டிலிருந்து ஆந்திரா பிரிந்த போது, சென்னை எங்களுக்கு வேண்டும் என்று சென்னை வாழ் தெலுங்கு மக்கள் கோரிக்கை வைத்ததிலிருந்து சென்னையில் அவர்களின் "இருப்பை" மதிப்பிட்டுக் கொள்ளலாம்.  "மதராஸ் மனதே" என்று ஊர்வலம் எல்லாம் நடந்தது உண்டு.  நான் ஆந்திரா பிரிந்த பிறகு சென்னைக்கு வந்தவன்.  அன்றைய சென்னைத் தமிழை அனுபவித்தவன்,
                                                  …வளரும்…